வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தி திருக்கல்யாணம்


வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தி திருக்கல்யாணம்
x

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நந்தி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அரியலூர்

பாடல் பெற்ற சிவ தலம்

"நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்" இந்த திருமணத்தை நேரில் காணும் வரன்களுக்கு அடுத்த நந்தி கல்யாணத்துக்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலம் தமிழ்நாட்டிலேயே அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழபாடி திருத்தலம் மட்டும் தான். சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்த திருத்தலம் திருமழபாடி திருத்தலம். கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. திருமானூர் அருகே உள்ள திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவில் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் முனிவரால் பூஜிக்கப் பெற்றதுமாகும். இந்த கோவிலில் வியாக்ர பரத முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும், சிலா முனிவரின் புதல்வர் திருநந்தியெம்பெருமானுக்கும் ஆண்டு தோறும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் முன்பாக உள்ள திருமண மேடையில் நடைபெறும்.

நந்தி திருக்கல்யாணம்

அதன்படி இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணி அளவில் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பொருள்களால் இருவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னர் வேத வித்வான்கள் யாக பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோவிலின் முன்பு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் ஆகியோர் எழுந்தருள பக்தர்கள் முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியெம்பெருமான் தாலி கட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story