நங்கவள்ளி பேரூராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலரின் மகன் மீது தாக்குதல்
நங்கவள்ளி பேரூராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலரின் மகன் மீது தாக்குதல் நடந்தது.
மேச்சேரி
நங்கவள்ளி மேற்கு ரத வீதியில் வசித்து வருபவர் கிருஷ்ணவேணி. இவர் நங்கவள்ளி பேரூராட்சி 7-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆவார். இவரும், இவருடைய மகன் செந்தில்குமாரும் (வயது 48), நங்கவள்ளி பேரூராட்சி பகுதிகளில் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் பணியாளரான நங்கவள்ளி தேவாங்கர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (42), சிலிண்டர் வினியோகத்தின் போது, சிலிண்டர் விலையை விட அதிகமாக பணம் கேட்பதாக மேட்டூர் உதவி கலெக்டருக்கு புகார் செய்திருந்தனர். இதனால் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் மகன் செந்தில்குமாருக்கும், சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர் செந்தில்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் பேரூராட்சி கவுன்சிலாின் மகன் செந்தில்குமார் நங்கவள்ளி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்செந்தில்குமார், சிலிண்டருக்கு அதிகமாக பணம் கேட்பதாக புகார் கொடுக்கிறாயா? எனக்கூறி உள்ளார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர் செந்தில்குமார், பேரூராட்சி கவுன்சிலரின் மகன் செந்தில்குமாரை தாக்கினார். இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்றொரு செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.