'நானோ யூரியா' மூலம் பயிர்களுக்கு 85 சதவீதம் தழைச்சத்து கிடைக்கும்- வேளாண்மை அலுவலர்
நானோ யூரியா மூலம் பயிர்களுக்கு 85 சதவீதம் தழைச்சத்து கிடைக்கும் என வேளாண்மை அலுவலர் கூறினார்.
நானோ யூரியா மூலம் பயிர்களுக்கு 85 சதவீதம் தழைச்சத்து கிடைக்கும் என வேளாண்மை அலுவலர் கூறினார்.
செயல் விளக்க நிகழ்ச்சி
வேளான்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் நானோ யூரியா செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின்பேரில் நடந்த இந்த செயல் விளக்க நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் சுரேஷ்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் கோவிந்தராஜ், தாமரைச்செல்வி, ஆத்மா திட்டம் தொழில்நுட்ப மேலாளர் வைரமுத்து, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்செல்வி, விவேக் மற்றும் சித்தமல்லி மேல்பாதி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது வேளாண்மை அலுவலர் பேசியதாவது:-
நானோ யூரியா
ஆண்டுதோறும் யூரியாவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. யூரியாவை பயன்படுத்துவதால் 30 முதல் 35 சதவீதம் மட்டுமே தழைச்சத்தானது பயிர்களுக்கு கிடைக்கிறது. இதனால் மண்வளமும் மாசுபடுகிறது. இந்த நிலையில் உர நிறுவனமான இப்கோ நானோ யூரியா எனப்படும் இலை வழி உரமிடும் முறையை கண்டுபிடித்தது. அதன்படி ஒரு ஏக்கருக்கு 500 மில்லி நானோ யூரியாவை 125 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
நானோ யூரியாவை பயன்படுத்துவதினால் 80 முதல் 85 சதவீத தழைச்சத்தானது பயிர்களுக்கு கிடைக்கும். டிரோன் மூலம் இலைவலி உரம் இடுவதால் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவுக்கு உரத்தை தெளிக்கலாம். ஆட்கள் குறைபாடு ஏற்படும் பட்சத்தில் ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து டிரோன் தெளிப்பானை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நெல் விதைக்கும் கருவி
இதையடுத்து ஆத்மா திட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைக்கும் கருவி வழங்கப்பட்டது. இதில் கோவில்வெண்ணியை சார்ந்த மோகன்தாஸ் காந்தி என்பவருக்கு மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி நெல் விதைக்கும் கருவியை வழங்கினார். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண்மை உதவி அலுவலர்கள் ஸ்ரீகாந்த், சரவணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் வைரமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.