நரசிம்மர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டாரில் நரசிம்மர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கோவிலின் மேற்கூரையை பிரித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டாரில் நரசிம்மர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கோவிலின் மேற்கூரையை பிரித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

நரசிம்மர் கோவில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அருகே பரளியாற்றையொட்டி நரசிம்மர் கோவில் உள்ளது. கேரள பாணியில் ஓடு வேய்ந்து கட்டப்பட்ட இந்த கோவில் திருச்சூர் நடுவில் மடத்துக்குச் சொந்தமானது.

இங்கு ஐம்பொன்னில் செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், அன்னபூரணி, சுப்பிரமணியர் சிலைகள் உள்ளன. ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பலர் நரசிம்மர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். கோவில் வளாகத்தில் நான்கு சாமியார்களின் ஜீவ சமாதிகள் மற்றும் நாகலிங்க மரம், சர்ப்பக்காவு ஆகியவையும் காணப்படுகிறது.

2 உண்டியல்கள்

மடத்துக்கு சொந்தமானதாக இந்த கோவில் இருந்தாலும், ஐம்பொன் சிலைகள் வைத்து வழிபடுவதால் இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1½ ஆண்டுகளுக்கு முன்பு தனியாக பெரிய அளவிலான உண்டியல் ஒன்று வைக்கப்பட்டது. இது தவிர மடம் சார்பில் தனியாக குடத்திலான உண்டியலும் உள்ளது.

மேலும் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட உண்டியல் பணம் இதுவரை எண்ணப்படாமல் இருந்தது. கோவிலில் அர்ச்சகர்களாக உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி (32), ஷம்புநாத் (23) ஆகியோர் இருந்தனர்.

உடைந்த நிலையில் கிடந்தன

இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு கோவில் கதவை திறந்து உள்ளே சென்ற உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களையும் காணவில்லை. கருவறையின் வெளிப்பகுதி வாயிலை ஒட்டியபடி 2 உண்டியல்களும் உடைந்த நிலையில் கிடந்தன.

உடனே உண்ணிகிருஷ்ணன் கோவில் மேலாளர் ஜோதிஷுக்குமத்திற்கு தெரிவித்தார். பின்னர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவிலுக்கு விரைந்தனர்.

மேற்கூரையை பிரித்து கைவரிசை

கோவிலை சுற்றி பார்வையிட்ட போது கோவில் வெளியே ஏணி இருந்தது. மேலும் ஓடு பிரிக்கப்பட்ட நிலையில் காட்சி அளித்தது. இதனை வைத்து பார்த்த போது நள்ளிரவில் கோவிலில் கொள்ளையர்கள் ஏணி வழியாக ஏறி மேற்கூரையை பிரித்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கோவிலுக்குள் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 2 உண்டியல்களை இழுத்துச் சென்று அதை உடைத்துள்ளனர். அதிலிருந்த ரூபாய் நோட்டுகளை மட்டும் முழுமையாக அள்ளிக் கொண்டனர். ஆனால் சில்லறை காசுகளை அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர்.

மேலும் தடயங்கள் எதுவும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவாகும் உபகரணங்களையும் எடுத்துச் சென்று விட்டனர்.

பணம் கொள்ளை

கொள்ளையர்கள் விட்டு சென்ற நாணயங்கள் மட்டும் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இதனால் கொள்ளை போன ரூபாய் நோட்டுகள் பல்லாயிரக்கணக்கில் இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் உருவம் ஏதேனும் ஆதிகேசவ பெருமாள் கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். நரசிம்மர் கோவிலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story