விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பவர்களுடன் தொடர்பில் இருந்தால் பணியிடை நீக்கம் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில்  போதைப்பொருள் விற்பவர்களுடன் தொடர்பில் இருந்தால் பணியிடை நீக்கம்  போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் போலீசார் தொடர்பில் இருந்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்கும் விதமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதை மாத்திரை ஊசி கடத்தலை தடுக்கும் விதமாக 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை மாத்திரை ஊசி, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அவர்களிடமிருந்து 39 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

போலீசாருக்கு எச்சரிக்கை

மேலும் கடந்த ஒரு வருடமாக ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டதாக 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் போலீசார் யாரேனும் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டால் பாரபட்சமின்றி அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். எனவே பணியில் கவனத்தோடு செயல்பட்டு போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை இல்லாத மாவட்டமாக விழுப்புரத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story