நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ விழா


நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ விழா
x

நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ விழா நடைபெற்றது. இதில் 300 நாதஸ்வர கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்து அசத்தினர்.

கரூர்

நாத உற்சவ விழா

கரூர் அருகே உள்ள நெரூரில் சவுந்திர நாயகி உடனாகிய அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நேற்று 13-ம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது.இதனையொட்டி காலை 6 மணியளவில் அக்னீஸ்வரர் சுவாமிக்கு மங்கள இசையுடன் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் நாதஸ்வரம், தவில், வீணை, வயலின், மிருதங்கம், மோர்சிங், தபேலா, லயம் குழுவினரின் நாத சங்கமமும், 10.30 மணியளவில் அருளுரையும் நடைபெற்றது. பின்னர் மதியம் 2 மணியளவில் தேவார பண்ணிசையும், 3.30 மணியளவில் சிவபுண்ணியம் அருளுரையும் நடைபெற்றது.

இசை நிகழ்ச்சி

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் நாதஸ்வரம், தவில் வித்வான்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பாடல்களை இசைத்தனர். இந்த இசை நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியையொட்டி காலை முதலே நெரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நெரூர் அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றம் செய்திருந்தனர்.


Next Story