பின்தங்கிய, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சேவை புரியும் மகளிருக்கு தேசிய விருது


பின்தங்கிய, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சேவை புரியும் மகளிருக்கு தேசிய விருது
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பின்தங்கிய, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சேவை புரியும் மகளிருக்கு தேசிய விருதுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

பின்தங்கிய, பாதிப்படைந்த பெண்களுக்கு சேவை புரியும் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் நாரிசக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வருகிற அக்.25-ந் தேதி கடைசிநாளாகும்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேசிய விருது

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுஅமைச்சகத்தின் மூலம் மகளிருக்காக தனித்துவமான சேவை, குறிப்பாக பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கான சேவை, குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு, சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் "நாரி சக்திபுரஸ்கார் விருது" என்னும் மகளிருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதிவாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த விருது பெற தகுதி வாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கருத்துருவை www.awards.gov.inஎன்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க 25.10.2022 கடைசி நாள் ஆகும். இந்த நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story