ஆனையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று- மேயர் இந்திராணி ஆய்வு
ஆனையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று குறித்து மேயர் இந்திராணி ஆய்வு செய்தார்
மதுரை மாநகராட்சி மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை ஆகிய 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் வரும் ஆண்டில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு சுயமதிப்பீடு, மாநில அரசின் மதிப்பீடு மற்றும் மத்திய அரசின் மதிப்பீட்டை தொடர்ந்து சான்று வழங்கப்படும். மதுரை மாநகராட்சி ஆனையூர் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு இந்த சான்று பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு மத்திய அரசின் குழுவினரான நாசிக் அரசு மருத்துவமனை அபிஷேக் சுபாஷ் கோசாவி மற்றும் சூரத் மாவட்ட தரக்கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் டாக்டர் மகேந்திர பட்டேல் ஆகிய இருவரும் நேற்று ஆய்வு செய்தனர். முன்னதாக மேயர் இந்திராணி, இருவரால் மதிப்பீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு தரமான பொது சுகாதார சேவையினை தங்கு தடையின்றி வழங்குவது நமது முதல் இலக்காக பணியாற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகராட்சியில் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் தேசிய தரச்சான்று பெற சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். ஆய்வின் போது நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன், உதவி நகர்நல அலுவலர் ஸ்ரீகோதை, மாவட்ட தர மருத்துவ அலுவலர் பொன்பாத்திப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.