தன்னார்வலர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி


தன்னார்வலர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி
x

கூடலூரில் தன்னார்வலர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளித்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் தன்னார்வலர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளித்தனர்.

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை களைவதற்காக கிராமங்கள் தோறும் முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பேரிடர் சமயத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கூடலூரில் உள்ள தனியார் அரங்கில் நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் சித்தராஜ், நடேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார், தேசிய பேரிடர் மீட்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சஞ்சீவ் ஜெவாஷ், ரஞ்சித் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளித்தனர்.

செயல்முறை விளக்கம்

தொடர்ந்து பேரிடர் இடர்பாடுகளில் சிக்கியவரை பாதுகாப்பாக மீட்பது, பூகம்பம் ஏற்படும் நேரத்தில் பாதுகாப்பாக இருப்பது உள்பட பல்வேறு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதுதவிர அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு முதற்கட்ட மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விளக்கினர். பின்னர் பேரிடர் சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் வழங்கி பேசும்போது கூறியதாவது:-

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அதிகம் பெய்கிறது. இதனால் 6 மாதங்கள் மழை பெய்யும் பகுதியாக விளங்குகிறது. கடந்த மாதம் முதல் எதிர்பாராத வகையில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் 59 வீடுகள் சேதம் அடைந்தது.

பேரிடர்களை தடுக்க முடியும்

அரசு துறைகள், பொதுமக்கள் இணைந்து பேரிடர்களை தடுக்க முடியும். பேரிடர் சமயத்தில் பொதுமக்கள் பதட்டம் அடையக் கூடாது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தாமல் மீட்பு படையினருடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் வனச்சரகர் ராஜேந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூராஜன் மற்றும் வருவாய்த்துறையினர், 850 முதல் நிலை மீட்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story