தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாட்டம்
தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் 2-வது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் டாக்டர் பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்). சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய பி.சி.ராய் பிறந்தது 1882-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி, இறந்தது 1962-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஆகும். மருத்துவம், அரசியல் நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக டாக்டர் பி.சி.ராய் திகழ்ந்தார். அவரது சேவைகளை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர்கள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி, இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் டாக்டர்களுக்கு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர் செந்தில்குமார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நரம்பியல் டாக்டர் ராஜேஷ் ஆகியோரின் சேவையினை பாராட்டி, அவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி வழங்கினார். அப்போது அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜூனன், என்.ஹெச்.எம். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்பரசு, மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.