தேசியக்கல்வி நாள் விழா
தேசியக்கல்வி நாள் விழா பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சார்பில் தேசியக்கல்வி நாள் விழா பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்வியியல் துறை தலைவர் பேராசிரியர் கலையரசன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கி பேசியதாவது:- இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான பாரத ரத்னா மவுலானா அப்துல்கலாம் ஆசாத் இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை போற்றும் வகையில் தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், மேம்படுத்தப்பட்ட தரமான கல்வியை மாணவர்கள்களுக்கு வழங்க வேண்டும் என்பதே. மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி தேசத்தை வலுப்படுத்த உதவும். ஜப்பான் நாட்டில் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியிலேயே கல்வி, உடற்பயிற்சி மற்றும் தனித்திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதால், அவர்கள் சிறந்த குடிமக்களாக, நேர்மையானவர்களாக, கடினமாக உழைப்பவர்களாக, பிறருக்கு உதவி செய்ய கூடியவர்களாக திகழ்கின்றனர் என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் துணை இயக்குனர் சமீம் பேசினார். பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் பேராசிரியர் சங்கரநாராயணன், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராஜமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். இதையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.