சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மதிப்பீட்டு குழு ஆய்வு
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மதிப்பீட்டாளர்கள் குழு ஆய்வு செய்தனர்.
சாத்தூர்
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மதிப்பீட்டாளர்கள் குழு ஆய்வு செய்தனர்.
தேசிய மதிப்பீட்டு குழு
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறதா, அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என ஆய்வு நடத்த மத்திய அரசு லக்சயா தேசிய மதிப்பீட்டாளர்கள் குழுவை அமைத்துள்ளது.
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் லக்சயா தேசிய மதிப்பீட்டாளர்கள் குழுவைச் சேர்ந்த டாக்டர்கள் அசோக், ரம்மீஷ்ராம்நாத் மற்றும் மூத்த நர்சு அனுஸ்யா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சிகிச்சை முறை
ஆய்வின்போது பிரசவ வார்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது கர்ப்பிணிகளிடம் அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
இந்த ஆய்வு 3 நாட்கள் நடைபெறுகிறது. ஆய்வு குறித்த முடிவை நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். மத்திய அரசு கூறியுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு நிதி வழங்கப்படும். அதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின்போது தலைமை மருத்துவர் முனிசாயிகேசவன், காது, மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை டாக்டர் சிவக்குமார், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், ஆஸ்பத்திரி அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.