திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு மும்முரம்
திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது
திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் சுதந்திர தின விழாவானது ஆகஸ்டு 15-ந்தேதிக்கும் சில நாட்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட உள்ளது. இதேபோல் பள்ளி, கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகி வருவதால் இதற்கு தேவையான தேசியக்கொடி தயாரிக்கும் பணி இப்போதே ஆரம்பமாகி விட்டது. திருப்பூரில் ஆங்காங்கே சில பிரிண்டிங் நிறுவனத்தில் தேசியக்கொடிகளுக்கு மூன்று வர்ணங்களை பிரிண்டிங் போடும் பணி நடந்து வருகிறது.
இதேபோல், சில நிறுவனங்களில் பிரிண்டிங் செய்யப்பட்ட தேசியக்கொடியை தனித்தனியாக வெட்டி அதன் ஓரங்களை தைக்கும் பணி நடந்து வருகிறது. பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கொடி தயாரிப்பு நிறுவனத்தில் தற்போது தேசியக்கொடி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. திருப்பூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து தேசியக்கொடிக்கான ஆர்டர் வந்துள்ளதால் இங்கு தொழிலாளர்கள் தேசியக்கொடியை தைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேசியக்கொடியின் தயாரிப்பு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.