ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி


ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
x

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்திற்கு வழங்கப்பட்ட தேசிய கொடியை, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரனிடம் வழங்கி, திருச்செந்தூர் தாலுகாவில் இயங்கி வரும் அரசு பள்ளிகளுக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மூலமாக வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அபுல்கலாம் ஆசாத், மருதையா பாண்டியன், கவிதா மற்றும் சுயநிதி பிரிவு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் ஆகியோர் தேசிய கொடியை பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செந்தில்குமரன் நடுநிலைப்பள்ளி மற்றும் சரவண அய்யர் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தேசிய கொடியை ஒப்படைத்து அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழாவில் அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை கலந்துகொண்டார்.

ஆதித்தனார் கல்லூரியில் சென்னை வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் இன்னோவேஷன் கவுன்சில் பணிகளை ஆய்வு செய்தனர். ஆய்வு பேராசிரியர்களாக முனைவர் இளையவேல், எந்திரவியல் துறை பேராசிரியர் செந்தில்வேலன் ஆகியோர் கலந்துகொண்டனர். கவுன்சில் அமைப்பாளர் நித்யானந்த ஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, இன்னோவேஷன் கவுன்சிலின் பணிகள் பற்றி பேசினார். வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மற்றும் ஆதித்தனார் கல்லூரி மெண்டர்-மென்டி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஸிந்த் மிஸ்பா நன்றி கூறினார்.


Next Story