குறைவான வீடுகளில் தேசியக்கொடி
குறைவான வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்.
கோவிலில் தேசியக்கொடி
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவுப்பகுதியாக நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு ஏற்ற தேசிய கொடி பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நேற்று பெரம்பலூர் நகர்ப்பகுதியில் குறைவான வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதில் பெரம்பலூர் எடத்தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஷேர் ஆட்டோக்கள் தேசிய கொடியுடன் வலம் வந்தன. பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் தங்களது முகாம் அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றினர்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஆனால் விழிப்புணர்வு இல்லாததால் நகர்ப்பகுதியில் பெரும்பாலான வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. கிராமப்புறங்களில் பரவலாக வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், கடைகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.