75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலத்தில் வீடுகள், கடைகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலத்தில் வீடுகள், கடைகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
வீடுகளில் தேசியக்கொடி
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் நேற்று முதல், நாளை (திங்கட்கிழமை) வரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதுதொடர்பாக பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் முகப்பு படமாக தேசியக்கொடி படத்தை வைக்க தொடங்கி விட்டனர். இந்தநிலையில் சேலம் மாநகர் முழுவதும் பெரும்பாலான வீடுகளில் நேற்று முதல் தேசியக்கொடி பறக்க தொடங்கி விட்டது. வீட்டின் உரிமையாளர்கள் ஆர்வமுடன் தேசியக்கொடியை வாங்கி அதை வீட்டின் முன்பு அல்லது மாடியில் பறக்க விட்டனர்.
கடைகளிலும் ஏற்றப்பட்டது
இதேபோல் செவ்வாய்ப்பேட்டை, கடைவீதி, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட மாநகரில் பல்வேறு இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.
மேலும் அரசியல் கட்சி அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதுதவிர ஆட்டோ, லாரி, சரக்கு வாகனம் போன்றவற்றிலும் சிறிய அளவிலான தேசியக்கொடியை கட்டி பறக்கவிட்டு செல்வதை பார்க்க முடிந்தது.