மின்சாரம் தாக்கி தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழியர் சாவு
மின்சாரம் தாக்கி தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள், மின்கம்பங்களை அகற்றி சாலை விரிவாக்க பணியை துறை அதிகாரிகள் மூலம் செயல்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி டெண்டர் விடப்பட்டு ஒவ்வொரு பணிகளும் பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை விரிவுபடுத்திய பகுதிக்கு அருகே புதிதாக மின்கம்பங்களை நட்டு மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பகோணம் அருகே கொட்டியானூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவர் ஆஞ்சிநேயர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் மின்கம்பிகளை சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.