தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறையில் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தொழுநோயின் அறிகுறிகளான சிவந்த அல்லது மெலிந்த உணர்ச்சியற்ற அரிப்பில்லாத தேமல், காது மடல்கள் தடித்திருத்தல் மற்றும் கொப்பளங்கள், நரம்புகள் தடித்து செயலிழந்து இருத்தல், கை கால்களில் மரமரப்பு போன்றவை குறித்தும், தொழு நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டும் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். மேலும் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற விழிப்புணர்வு ஊர்வலம், ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் மருத்துவப் பணி தொழுநோய் இணை இயக்குனர் சங்கரி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் கந்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.