தேசிய அளவிலான நன்றி விழா
மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையடுத்து தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் ஆரல்வாய்மொழி அருகே நடந்தது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர், 3 அமைச்சர்கள், கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையடுத்து தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் ஆரல்வாய்மொழி அருகே நடந்தது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர், 3 அமைச்சர்கள், கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் கலந்து கொண்டனர்.
புனிதர் பட்டம்
குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவர் 23-4-1712 அன்று வாசுதேவன்- தேவகியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1745-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்றார். கிறிஸ்தவத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்காகவும், கிறிஸ்தவத்தில் வாழ்ந்ததின் காரணமாகவும் 1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏசு கிறிஸ்துவுக்காக ரத்தம் சிந்தி, மறைசாட்சியாக மரித்த இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபையும், கோட்டார் மறைமாவட்டமும், இறைமக்களும் நீண்டநாட்களாக வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்தை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து புனிதர் பட்ட பேராயம், மறைசாட்சி தேவசகாயம் புனிதர் நிலைக்கு உயர்த்த அவர் தகுதியானவர்தானா? என்பதை வரலாற்று ஆவணங்கள், சான்றுகள், அவரால் நிகழ்ந்த அற்புதங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தேவசகாயத்தை புனிதர் நிலைக்கு உயர்த்தி, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
நன்றி அறிவிப்பு கொண்டாட்டம்
அதன்படி கடந்த மே மாதம் 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் நேற்று ஆரல்வாய்மொழி அருகில் உள்ள காற்றாடிமலை பகுதியில் நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான விழா மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தன.
அங்கு பிற்பகல் 3 மணி அளவில் இந்த விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
3 அமைச்சர்கள் பங்கேற்பு
அதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய்வசந்த், எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ்குமார், ரூபி மனோகரன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, குமரி சி.எஸ்.ஐ. பேராயர் ஏ.ஆர்.செல்லையா, பாலபிரஜாபதி அடிகளார், தமிழக அரசின் குமரி மாவட்ட ஹாஜி அபுசாலி மற்றும் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் தேவசகாயம் புனிதர் பட்ட நன்றி விழா சிறப்பு மலரை போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி வெளியிட, புனிதர் திருபண்ட பணி ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த அமலகிரி எழில் பெற்றுக்கொண்டார். தேவசகாயத்தின் வரலாற்று புத்தகம், ஆய்வு கட்டுரை, தேவசகாயம் நவநாள் புத்தகம், அவரை பற்றிய பாடல் புத்தகம் ஆகிய புத்தகங்களை அகில இந்திய ஆயர் பேரவை தலைவரான கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் வெளியிட்டார். புத்தகங்களை பாலபிரஜாபதி அடிகளார் பெற்று கொண்டார். புனித தேவசகாயத்தின் திருஉருவப்படத்தை வரைந்த கனகராஜ் கங்கன் என்பவருக்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு வழங்கினார்.
கூட்டுத்திருப்பலி
இதையடுத்து மாலை 5 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி தொடங்கியது. திருப்பலியை தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி நிறைவேற்றினார். அவருடன் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி, அகில இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ், சீரோ மலபார் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்ராவோ, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரகப் பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, புதுவை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், திருவனந்தபுரம் பேராயர் தாமஸ் நெட்டோ, போபால் பேராயர் அலங்கார ஆரோக்கிய செபாஸ்டியன் துரைராஜ், நாக்பூர் பேராயர் எலியாஸ், ஆயர்கள் சிரில் பசேலியஸ், முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியஸ், ஜோசுவா மார் இக்னாதியோஸ், விசுவாசம் செல்வராஜ், மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், ஹென்றி டிசோசா, தக்கலை சீரோ மலபார் கத்தோலிக்க ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் சாக்கோ தோட்டுமரிக்கல், அதான்சியஸ் ரெத்னசுவாமி, அந்தோணிசாமி, ஸ்டீபன் ஆண்டனி பிள்ளை, ஆரோக்கியராஜ், தேவதாஸ் அம்புரோஸ், அந்தோணிசாமி நீதிநாதன், தாமஸ் பால்சாமி, சின்னப்பா, ஜூட் ஜெரால்ட் பால் ராஜ், சூசைமணிக்கம், ஜெரோம் தாஸ், டோனி நீலன்காவில், தாமஸ் தரேயில் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
முன்னதாக நட்டாலம், வடக்கன்குளம், பெருவிளை, கோட்டார் ஆகிய பங்கு நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினர். அதை தொடர்ந்து தேவசகாயத்தின் திருவுருவப்படத்தை போப் ஆண்டவரின் இந்திய தூதர் திறந்து வைத்தார். திருப்பலியின் இறுதியில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் வாழ்த்துச் செய்தி அளித்தார். முடிவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தமிழக அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள், விழாவக்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
விழாவில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், அரசு வக்கீல் லீனஸ்ராஜ், நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், செயல் அலுவலர் ஜோஸ்லின்ராஜ், கவுன்சிலர்கள் ஜெனட் சதீஸ்குமார், ஜோசப்ரத்னராஜ், ஏசுமணி, முன்னாள் கவுன்சிலர் சதீஸ்குமார், மற்றும் குமரி மாவட்ட திருவருட்பேரவை நிர்வாகிகள், பல்சமய பிரதிநிதிகள், குமரி மாவட்ட அதிகாரிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரப் பரிபாலகரும் மதுரை பேராயருமான அந்தோணி பாப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் ஜாண்குழந்தை, கோட்டார். குழித்துறை மறைமாவட்டங்களின் அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் செய்திருந்தனர்.
போப் ஆண்டவரின் இந்திய தூதர் பேச்சு
மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து நடந்த தேசிய அளவிலான நன்றி விழாவின் இறுதியில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் ஏற்பாட்டில் தேவசகாயத்தின் புனிதர் பட்டத்திற்கான தேசிய நன்றி விழாவில் நான் பங்கேற்றிருப்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. புனிதர் தேவசகாயத்தின் வாழ்க்கை மற்றும் முன்னுதாரணத்திற்காக கடவுளுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். கடவுளின் முன்னிலையில் இருந்து, எங்களுடனான அன்பையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும் அனைத்து புனிதர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். ஒவ்வொரு துறவியின் வாழ்க்கையும் கிறிஸ்துவின் முன்மாதிரியான பிரதிபலிப்பைக் காட்டுகிறது. அது விசுவாசிகளின் போற்றுதலுக்கு தகுதியானது.
உண்மையாக வாழ்ந்தார்
புனிதர் தேவசகாயம் கிறிஸ்துவுக்காகவும், திருச்சபையின் அன்பிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கக்கூடியவராக இருந்தார். கடந்த மே மாதம் 15-ந் தேதி வாடிகனில் நடந்த புனிதர் பட்டமளிப்பு விழாவின் போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் பத்து புதிய புனிதர்களை அறிவித்தார். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனிதர் தேவசகாயமும் ஒருவர்.
கடவுள் நம்மை எப்படி நிபந்தனையின்றி நேசிக்கிறார் என்பதையும், பரிசுத்தத்திற்கான பாதை எப்படிப்பட்டது? என்பதையும், ஏசுவை மற்றவர்களிடம் பார்க்க வேண்டும் என்பதையும், நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் எப்படி ஒரு கனவைக் கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இயேசுவின் சீடர்களாக இருப்பதும், பரிசுத்தத்தின் பாதையில் முன்னேறுவதும் முதலில் கடவுளின் அன்பின் வல்லமையால் நம்மை உருமாற்ற அனுமதிப்பதாகும் என்றார், போப் ஆண்டவர் பிரான்சிஸ். புனிதர் தேவசகாயம் தனது வாழ்வில் உண்மையாக வாழ்ந்தார்.
சேவைக்காக மதிக்கப்பட்டார்
கடவுளால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் கடவுளின் அன்புக்குரியவர்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார். புனிதர் தேவசகாயம் படித்தவர். சமூகத்தில் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் கொண்டிருந்தார். கடவுளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் மனிதகுலத்திற்கான சேவைக்காக அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். புனிதர் தேவசகாயத்தின் அர்ப்பணிப்பு வாழ்வு மூலம், அவருடைய வழியைப் பின்பற்றவும், நல்லொழுக்கமான வாழ்க்கையை நடத்தவும், அன்பிலும், சேவையிலும் அனைவரையும் சென்றடையவும் நம்மைத் தூண்டுகிறார். உங்கள் மீது கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டி, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதத்தை நான் வழங்குகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.