தேசிய நூலக வார விழா தொடங்கியது
ஊட்டி, கோத்தகிரியில் தேசிய நூலக வார விழா தொடங்கியது. இதையொட்டி நடந்த புத்தக கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஊட்டி,
ஊட்டி, கோத்தகிரியில் தேசிய நூலக வார விழா தொடங்கியது. இதையொட்டி நடந்த புத்தக கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டனர்.
நூலக வார விழா
தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின், நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில், 55-வது தேசிய நூலக வார விழா ஊட்டியில் உள்ள மைய நூலகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி புத்தக கண்காட்சி மற்றும் நீலகிரி மண்ணும் மக்களும் என்ற தலைப்பில் ஆவணப்பட கண்காட்சி நடைபெற்றது. இதற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி தலைமை தாங்கினார். நூலகர் ரவி முன்னிலை வகித்தார்.
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி உள்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். கண்காட்சியில் அறிவியல், வரலாறு, மருத்துவம், உளவியல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. வாசிப்பு பழக்கத்தை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
ஆவணப்பட கண்காட்சி
மேலும் ஆவணப்பட கண்காட்சியை மாணவ-மாணவிகள் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மதிமாறன் செய்திருந்தார். மேலும் அடுத்து ஒரு வாரம் கவியரங்கம், நாடகம், வாசிப்பை நேசிப்போம், கருத்தரங்கம், பரிசளிப்பு போன்ற நிகழ்ச்சிகள் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கனரா வங்கி மேலாளர் பிரேம்குமார், நூலக ஆய்வாளர் வசந்த மல்லிகா, நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சுரேஷ் ரமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோத்தகிரி கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் அளியூர் போஜன் தலைமை தாங்கினார்.
இந்திய நிலக்கரி நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜேஷ் சந்தர் புத்தக கண்காட்சி தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். முடிவில் நூலகர் முருகன் நன்றி கூறினார்.