தேசிய அளவில் இளம் விஞ்ஞானி இந்தியா விருது: பஞ்சப்பட்டி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் தேர்வு
தேசிய அளவில் இளம் விஞ்ஞானி இந்தியா விருதுக்கு பஞ்சப்பட்டி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான இந்திய அளவில் இளம் விஞ்ஞானி மாணவர்களை தேர்வு செய்யும் விதமாக தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை இணைய வழியில் 2 கட்டமாக நடத்தியது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து விண்வெளி ரோபோடிக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் செயலி மேம்பாடு ஆகிய துறைகளின் கீழ் விண்ணப்பித்த 1000-க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்து இறுதிச் சுற்றுக்கு 103 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 2-ம் சுற்றில் அரசு பள்ளி பிரிவில் ரோபோடிக்ஸ் துறையில் முதல் 8 தர நிலைகள் பெற்று தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தில் இருந்து கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் யுவராஜா மற்றும் வேல்முருகன் ஆகியோர் தேசிய அளவில் அரசு பள்ளி ரோபோடிக் பிரிவில் தேர்வான 8 மாணவர்களில் 2 மாணவர்களாக தேர்வு பெற்றனர். இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்களது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்த உள்ளனர். தேசிய அளவில் இளம் விஞ்ஞானி இந்தியா விருது இறுதிச்சுற்று அறிவியல் கண்காட்சியில் தேர்வு பெற்ற மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர் தனபால் ஆகியோரை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் அங்கையர்கண்ணி, ஆசிரியர்கள் உடனிருந்தனர்.