கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
தர்மபுரி பகுதியில் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. வீடுகளில் கொலு வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தர்மபுரி பகுதியில் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. வீடுகளில் கொலு வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நவராத்திரி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் தொடங்கியது. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கோவில் வளாகத்தில் சாமி உற்சவர் சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சாமி, ஆனந்த நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரவாசுதேவ பெருமாள் கோவில்
மேலும் கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான களிமண் சிலைகள் மற்றும் பொம்மைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. முக்கிய இந்துக்கள் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களை நினைவுபடுத்தும் வகையில் கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நவராத்திரி கொலுவுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவில் மற்றும் பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி 9 நாட்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான அலங்கார சேவைகள் நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு பூஜைகள்
இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், வேல்முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், மருதவாணேஸ்வரர் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவில், சுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவில், மதிபோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வீடுகளில் கொலு
நவராத்திரி விழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள வீடுகளில் பெண்கள் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து பிரசாதம் வழங்கினர். ஒரு சில வீடுகளில் மிகப்பெரிய அளவில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.