சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடக்கம்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நாளை நவராத்திரி விழா தொடங்குகிறது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 41-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி நிறைவடைகிறது. மேலும் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். அதன்படி நவராத்திரி முதல் நாளான நாளை உற்சவ அம்மனுக்கு மதுரகாளியம்மன் அலங்காரமும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை 28-ந்ேததி (புதன்கிழமை) காமாட்சி அலங்காரமும் நடக்கிறது. வருகிற 29-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 30-ந்தேதி துர்க்கை அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந்தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 2-ந்தேதி மாரியம்மன் அலங்காரமும், 3-ந்தேதி லெட்சுமி அலங்காரமும் நடக்கிறது. 4-ந்தேதி ஆயுதபூஜை விழாவில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரமும் செய்யப்படுகிறது. 5-ந்தேதி விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், பூசாரிகள், மண்டகப்படி உபயதாரர்கள் செய்து வருகின்றனர். நவராத்திரி விழா நாட்களில் கோவில் நடை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.