பழங்குடியினர் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட என்.சி.சி. மாணவிகள்
பழங்குடியினர் அருங்காட்சியகத்தை என்.சி.சி. மாணவிகள் பார்வையிட்டனர்.
வெலிங்டன்,
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு மலையேற்ற பயிற்சி குன்னூர் அருகே வெலிங்டனில் அவாஹில் ராணுவ முகாமில் என்.சி.சி. மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. முதல் நிலை பயிற்சி அவாஹில் முதல் சிம்ஸ் பூங்கா வரை 4 கிலோ மீட்டர் தூரம் பயிற்சி அளிக்கப்பட்டது. 2-ம் நிலை பயிற்சி 8 கிலோ மீட்டர் தூர அடிப்படையில் 3 இடங்களில் நடைபெற்றது. சேலாசில் இருந்து பக்காசுரன் மலை, உபதலையில் இருந்து கேத்தொரை கிராமம் வழியாக பழத்தோட்டம் சென்றடைந்தது. பின்னர் முத்தோரை பாலாடாவில் இருந்து முத்தநாடுமந்து பகுதியை மாணவிகள் அடைந்தனர். முடிவில் மாணவிகள் பழங்குடியின கிராமம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டனர். அங்கு பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகள், பாரம்பரியம் குறித்து தெரிந்துகொண்டனர். இதன் மூலம் என்.சி.சி. மாணவிகளுக்கு பன்முக கலாச்சாரத்தை பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.