ஆழ்வார்திருநகரி அருகே பூட்டிய வீட்டில் 56 பவுன் நகை கொள்ளை


ஆழ்வார்திருநகரி அருகே, பூட்டிய வீட்டில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி அருகே, பூட்டிய வீட்டில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூட்டிய வீடு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தங்கையாபுரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவருடைய மனைவி லலிதா (வயது 65). இவர்களுக்கு 3 மகன்களும், ராணி என்ற மகளும் உள்ளனர்.

ஞானமணி ஏற்கனவே இறந்து விட்டார். மகன்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகன்கள் பெங்களூருவில் கடலை மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறார்கள். ராணிக்கு திருமணம் ஆகி செய்துங்கநல்லூரில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் லலிதா செய்துங்கநல்லூரில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டி போட்டு விட்டு போய் இருந்தார்.

நகைகள் கொள்ளை

பின்னர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும், வீட்டில் இருந்த 56 பவுன் நகைகளை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதாக ஆழ்வார்திருநகரி போலீசில் அவர் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

மர்மம் நீடிப்பு

வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படவில்லை. பின்வாசல் பூட்டை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் வீட்டிக்குள் புகுந்து எவ்வாறு நகைகளை கொள்ளையடித்து சென்றார்கள்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகைகள் கொள்ளை போனது குறித்து லலிதாவிடம் போலீசார் விசாரித்தனர். இந்த கொள்ளையில் மர்மம் நீடிப்பதால் போலீசார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தனிப்படை

இந்த கொள்ளையில் துப்பு துலக்குவதற்காக தூத்துக்குடி சூப்பிரண்டின் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெட்ரிக்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நேற்று துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

வீட்டின் கதவு பூட்டை உடைக்காமல் நகைகள் கொள்ளை போன சம்பவம் பற்றி அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story