அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து ஆடு சாவு
மர்ம விலங்கு ஆடடை கடித்து கொன்றது
அந்தியூர் அருகே நகலூர் பெருமாள்பாளையம் அழகு நகர் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 30). இவர் 4 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளிப்புறத்தில் 4 ஆடுகளையும் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. இதனால் அவர் அந்த ஆட்டை தேடிப்பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் அந்த ஆட்டின் பாதி உடல் கிடந்தது. நள்ளிரவு சகுந்தலாவின் வீட்டு பகுதிக்கு வந்த மர்ம விலங்கு அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கடித்து குதறி தின்றதுடன், மீதம் உள்ள உடலை அந்த பகுதியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்துகிடந்த ஆட்டை பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் பதிவான கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எனினும் எந்த விலங்கு என வனத்துறையினரால் உறுதி செய்ய முடியவில்லை.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எங்கள் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்று உள்ளது. எனவே மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்த வேண்டும்,' என்றனர்.