அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி சாவு
அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தாா்
அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 39). இவருடைய மனைவி அந்தோணியம்மாள். பாலகிருஷ்ணன் திருப்பூரில் உள்ள தனியார் நூல் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மணக்காடு என்ற இடத்தில் ஒரு குளத்தில் மீன்பிடிக்க சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவர் குளத்தில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து அந்தோணியம்மாள் கொடுத்த தகவலின்பேரில் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீன்பிடிக்க சென்றபோது பாலகிருஷ்ணன் தவறி தண்ணீரில் விழுந்து இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.