ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி


ஆண்டிப்பட்டி அருகே  அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி
x

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

அரசு பஸ்கள் மோதல்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று மாலை 4 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம் குறுவங்கோடு பகுதியை சேர்ந்த ரத்தினசாமி (வயது 41) ஓட்டினார். கண்டக்டராக மகேஷ் (46) என்பவர் இருந்தார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் மாலை 6 மணியளவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கணவாய் மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது. இதேபோல் மதுரையில் இருந்து தேனி நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள வளைவில் திரும்பியபோது, கண்இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பஸ்களின் முன்பக்கங்கள் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பஸ்சின் இருக்கைகள் அனைத்தும் உருக்குலைந்தன.

டிரைவர் சாவு

இதையடுத்து பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்களுடன் இணைந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் ரத்தினசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

47 பேர் படுகாயம்

இந்த விபத்்தில் மதுரையில் வந்த அரசு பஸ்சை ஓட்டி வந்த தூத்துக்குடியை சோ்ந்த சேரன்தையன் (47), திருச்சுழியை சேர்ந்த பஸ் கண்டக்டர் மதுரைவீரன் (51) மற்றும் 2 பஸ்களில் பயணம் செய்த சங்கரன்கோவிலை சேர்ந்த மாரியம்மாள் (51), தேனியை சேர்ந்த கணபதி (48), பேரையூரை சேர்ந்த வேல்முருகன் (26), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மணிகண்டன் (30), திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மல்லிகா (60), தென்காசியை சேர்ந்த அருணாச்சலம் (57), கூடலூரை சேர்ந்த மோனிகா (20), கம்பத்தை சேர்ந்த பொம்மையசாமி (43), ஆண்டிப்பட்டியை சேர்ந்த வெங்கடேசப்பெருமாள் (35) உத்தமபாளையத்தை சேர்ந்த யாழினி (22) உள்பட 47 47 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களுக்கு, தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் முரளிதரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story