ஆண்டிப்பட்டி அருகேஇடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்
ஆண்டிப்பட்டி அருகே ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 816 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த கடை கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது சிதிலமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் மழை காலத்தில் கட்டிடத்திற்குள் தண்ணீர் வருவதால் ரேஷன் பொருட்கள் பாழாகிறது. இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை பூட்டப்பட்டது.
இதையடுத்து அருகே உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நூலக கட்டிடத்தில் ரேஷன் கடை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் நூலக கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அனைத்தும் ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பழைய ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.