ஆண்டிப்பட்டி அருகே4-வது நாளாக நெசவாளர்கள் போராட்டம்
ஆண்டிப்பட்டி அருகே 4-வது நாளாக நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் செயல்படும் 300-க்கும் மேற்பட்ட நெசவு கூடங்கள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர். உயர்ரக காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பணிபுரியும் நெசவு தொழிலாளர்களுக்கான பழைய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் சம்பள உயர்வு தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
இந்நிலையில் 50 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டி.சுப்புலாபுரம் நெசவாளர்கள் கடந்த 1-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன் நெசவு தொழிலாளர்களும் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று 4-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சக்கம்பட்டி பகுதி நெசவாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் சக்கம்பட்டி பகுதி நெசவாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே புதிய ஊதிய உயர்வு குறித்து விசைத்தறி உரிமையாளர்கள்-தாசில்தார் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.