ஆண்டிப்பட்டி அருகே வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்ற 3 சிறுவர்கள் மீட்பு


ஆண்டிப்பட்டி அருகே வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்ற 3 சிறுவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்ற 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

தேனி

வடமாநிலத்திற்கு வேலை

ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள இட்லி கடைக்கு வேலைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சென்றபிறகு தினந்தோறும் அவர்கள் தங்களது பெற்றோரிடம் செல்போனில் பேசி வந்தனர். ஆனால் கடந்த 1 மாதமாக அந்த சிறுவர்கள் பெற்றோரிடம் பேசவில்லை. இதையடுத்து அவர்களை வேலைக்கு அழைத்து சென்றவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது தங் களுக்கு ஏதும் தெரியாது என்று அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சிறுவர்களின் பெற்றோர் தங்களது மகன்களை மீட்டு தரும்படி ராஜதானி போலீசில் புகார் கொடுத்தனர்.

சிறுவர்கள் மீட்பு

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சிறுவர்களை மீட்பதற்காக ராஜதானி இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர் ரஹ்மான், தலைமை காவலர் தங்கப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் அந்த படையினர் மத்திய பிரதேசத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த 3 சிறுவர்களும் அவர்கள் வேலை பாா்த்த இந்தூர் மாவட்டத்தில் இருந்து 340 கிலோமீட்டர் தூரத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 சிறுவர்களையும் போலீசார் மீட்டு ஆண்டிப்பட்டிக்கு அழைத்து வந்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த சிறுவர்கள் கூறுகையில், தங்களுக்கு சரியாக படிப்பு வராததால் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இட்லி கடைக்கு வேலைக்கு சென்றோம். பின்னர் வேலை பிடிக்காததால் அங்கு கிணறு தோண்டும் பணிக்காக வந்த தமிழ்நாட்டை சேர்ந்த சிலருடன் இந்தூர் மாவட்டத்திற்கு வந்தோம். அவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்லும் போது தங்களை அழைத்து செல்வதாக கூறினர். இதனால் நாங்கள் அங்கேயே இருந்துவிட்டோம். இந்நிலையில் போலீசார் எங்களை மீட்டு ஆண்டிப்பட்டிக்கு கொண்டு வந்தனர் என்றனர்.


Related Tags :
Next Story