ஆறுமுகநேரி அருகே கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது


தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:39+05:30)

ஆறுமுகநேரி அருகே கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் பஸ்சில் வீடு திரும்புவது வழக்கம்.

சக ஊழியருடன் சென்றார்

அதன்படி நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு அந்த இளம்பெண் ஊருக்கு திரும்புவதற்காக பஸ் நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவர் செல்லும் பஸ் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த பெண் வேலை பார்க்கும் ஓட்டலில் பணியாற்றும் சக ஊழியர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம், அந்த பெண் தன்னை ஆறுமுகநேரியில் இறக்கிவிடுமாறு கூறினார். அவரும் அந்த ெபண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றார்.

பின்தொடர்ந்து வந்த நபர்கள்

காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு லோடு ஆட்டோ வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் லோடு, மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதில் இருந்து 2 மர்மநபர்கள் இறங்கினார்கள். அவர்கள் திடீரென்று இளம்பெண்ணையும், மோட்டார் சைக்கிளில் வந்தவரையும் கத்திைய காட்டி மிரட்டினர்.

பலாத்காரம்

பின்னர் அந்த இளம்பெண்ணை, மர்ம நபர்களில் ஒருவர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து லோடு ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

2 வாலிபர்கள் கைது

அதில் காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 25), சீதக்காதி நகரைச் சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் முத்துப்பாண்டி அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி, அவருக்கு உடந்தையாக இருந்த சதாம் உசேன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பரபரப்பு

ஆறுமுகநேரி அருகே கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story