ஆசனூர் அருகே 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் கடும் அவதி


ஆசனூர் அருகே   5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்  வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 24 Sept 2022 1:00 AM IST (Updated: 24 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஈரோடு

ஆசனூர் அருகே 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தார்கள்.

இரவு போக்குவரத்துக்கு தடை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை செல்கிறது. இந்த திம்பம் மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையாகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாகவும் உள்ளது.

இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்தது.

போக்குவரத்து நெரிசல்

இந்தநிலையில் நேற்று மாலை கர்நாடகா மாநிலம் மற்றும் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரிகள் அதிக பாரம் என கூறி காரப்பள்ளம் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் லாரிகள் இருபுறமும் சாலை ஓரத்தி்ல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக அவ்வழியாக வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காரப்பள்ளம் முதல் புளிஞ்சூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவசரமாக வந்த ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 5 மணி நேரம் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டார்கள். அதன்பின்னரே போக்குவரத்து நெரிசல் சரியானது


Related Tags :
Next Story