ஆத்தூர் அருகே வீட்டின் மீது லாரி மோதி பெண் படுகாயம்
ஆத்தூர் அருகே வீட்டின் மீது லாரி மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சரகம் பழையகாயலை அடுத்துள்ள சர்வோதயாபுரி கீழத்தெருவை சேர்ந்தவர் சுடலைமணி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி (வயது 55). நேற்று முன்தினம் மாலை சுடலைமணி வெளியே சென்றிருந்தார். வீட்டில் மாலதி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த உப்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று திடீரென வீட்டின் மீது மோதி நின்றது. இதில் மாலதி படுகாயம் அடைந்தார். வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. மாலதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரத்தை அடுத்துள்ள சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்த செல்லதுரை மகன் செல்வகுமார் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.