பங்களாப்புதூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


பங்களாப்புதூர் அருகே   நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 23 Sep 2022 7:31 PM GMT)

விவசாயிகள் முற்றுகை

ஈரோடு

பங்களாப்புதூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரப்பதமான நெல்

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நஞ்சைபுளியம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு விதியின்படி 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

விவசாயிகள் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு் வந்த நெல்லை கொள்முதல் செய்யக்கோரி நஞ்சைபுளியம்பட்டியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று மதியம் முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதத்தை அளவிடும் எந்திரம் மூலம் நெல்லின் ஈரப்பதம் சோதனை செய்யப்பட்டது. இதில் எந்திரத்தின் காலாவதி தேதி முடிவடைந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாற்று எந்திரம் மூலம் நெல்லின் ஈரப்பதம் அளவீடு செய்யப்பட்டது. இதில் ஒரு சில விவசாயிகள் கொண்டு வந்த நெல் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் கொள்முதல் செய்யப்பட்டது. சிலர் ெகாண்டு வந்த நெல் ஈரப்பதம் அதிகம் இருப்பதாக கூறி வாங்க மறுத்தனர்.

போராட்டம்

இதையடுத்து அவர்கள் ஊழியர்களிடம் கூறும்போது, 'நெல்கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்லை கொள்முதல் செய்துகொண்டால் தான் மீதமுள்ள நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லை அறுவடை செய்ய முடியும்.

கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல் மழை பெய்தால் முற்றிலும் வீணாகி விடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மீண்டும் காலம் தாழ்த்தி விவசாயிகளை அலைக்கழிய வைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.

நெல் குவிப்பு

அதற்கு ஊழியர்கள் 'விரைவில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் நெல் கொள்முதல் செய்யப்படாததால் நிலையம் முன்பு ரோட்டோரம் மலைபோல் நெல்லை விவசாயிகள் குவித்து வைத்துள்ளார்கள்.

-------


Next Story