பவானிசாகர் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் சாவு
பவானிசாகர் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் இறந்தது.
புஞ்சைபுளியம்பட்டி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலை செல்கிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர் அருகே உள்ள சீரங்கராயன் கரடு பகுதியில் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையை ஒரு புள்ளிமான் கடந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் புள்ளிமான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதை பார்த்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மானின் உடலை மீட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்துவிட்டு, புதைத்துவிட்டனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து மானின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.