பவானிசாகர் அருகேஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம்நாயை துரத்தும் வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது
நாயை துரத்தும் வீடியோ
பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை நாயை துரத்தும் வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
நாயை துரத்தும் சிறுத்தை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் விளாமுண்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கிருந்து யானை மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு் செல்லும்.
விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி கல்குவாரியும், குடியிருப்பு பகுதியும் அமைந்துள்ளது. கல்குவாரியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனவே இரவு யானை அல்லது வேறு ஏதேனும் வனவிலங்குகள் வந்ததா? என்பதை கண்டறிய அங்கு பொருத்தப்பட்டு் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கல்குவாரியில் வேலை செய்தவர்கள் ஆய்வு செய்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு கல்குவாரியையொட்டிய குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைவதும், அப்போது அங்கு காவலுக்கு படுத்திருந்த நாயை சிறுத்தை துரத்தியதும், இதனால் நாய் அங்கிருந்து ஓடி சிறுத்தையிடம் இருந்து உயிர் தப்பியதும் பதிவாகியிருந்தது.
வீடியோ வைரல்
உடனே இதுபற்றி விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று கால்தடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
நாயை சிறுத்தை துரத்தும் வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை்தளங்களில் வைரலாகி வருகிறது.