பவானிசாகர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியல்
பவானிசாகர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பவானிசாகர் அருகே உள்ளது அண்ணா நகர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரியாக செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் முறையான மின்சார வசதியும் இல்லை என தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 7.30 மணி அளவில் அண்ணாநகர் பஸ் நிறுத்தத்துக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் தரையில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாவேஸ், சத்தியமங்கலம் துணை தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், 'விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 8.30 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.