பவானிசாகர் அருகே எறும்புதின்னி ஓடுகள் வைத்திருந்தவர் கைது


பவானிசாகர் அருகே   எறும்புதின்னி ஓடுகள் வைத்திருந்தவர் கைது
x

எறும்புதின்னி ஓடு

ஈரோடு

பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் கொத்தமங்கலம் பிரிவு வனவர் கர்ணன், வனக்காப்பாளர்கள் சந்துரு, விஜயகுமார், ஞானம் ஆகியோர் நேற்று முன்தினம் தனிக்குழுவாக பவானிசாகர் பஸ் நிலையப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.

அதில் எறும்பு தின்னி ஓடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் பவானிசாகர் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 56) என்பதும், அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விளாமுண்டி வனப்பகுதியில் விறகு பொறுக்க சென்ற போது இறந்து கிடந்த எறும்பு தின்னியின் ஓடுகளை மட்டும் அரிவாளால் வெட்டி எடுத்து வந்து காய வைத்து விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும், தற்போது நீண்ட நாட்கள் ஆனதால் அதை வேறு இடத்தில் மறைத்து வைக்க கொண்டு சென்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து எறும்பு தின்னி ஓடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேலுச்சாமியை வனத்துறையினர் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story