பவானி அருகே பண்ணையில் தீ விபத்து; 5 ஆயிரம் கோழிகள் கருகின
பவானி அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் எரிந்து நாசம் ஆனது.
பவானி
பவானி அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் எரிந்து நாசம் ஆனது.
கோழிப்பண்ணை
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் பச்சப்பாளி ஆண்டிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 45).
இவர் அந்த பகுதியில் கோழிப்பண்ணை வைத்து உள்ளார். இதில் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக 320 அடி நீளத்தில் 20 அடி அகலத்தில் கொட்டகை அமைத்து உள்ளார்.
தீப்பிடித்தது
இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தது. அப்போது கோழிப்பண்ணையில் உள்ள மின்சார ஒயரில் திடீரென தீப்பிடித்தது. இதனால் கோழிப்பண்ணையில் தீப்பற்றியது. இதைத்தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
5 ஆயிரம் கோழிகள் கருகின
இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகி செத்தன. மேலும் கோழிப்பண்ணையில் இருந்த கருவிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோழிகள், கருவிகள், பொருட்கள், கோழிப்பண்ணை கொட்டகை ஆகியவை எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.