பவானி அருகே காதல் தோல்வியால் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை


பவானி அருகே   காதல் தோல்வியால் விஷம் குடித்து  கல்லூரி மாணவர் தற்கொலை
x

கல்லூரி மாணவர் தற்கொலை

ஈரோடு

'இன்ஸ்டாகிராம்' மூலம் ஏற்பட்ட காதல் தோல்வியால் பவானி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முதுகலை பட்டதாரி மாணவர்

பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் மனக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி சுமித்ரா. இவர்களுடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 22). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக ராமகிருஷ்ணன் செல்போன் பார்த்துக்கொண்டு வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்து உள்ளார்.

விஷம் குடித்தார்

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நள்ளிரவு நேரமாகியும் செல்போன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே போய் தூங்கு என ராமகிருஷ்ணனிடம் அவருடைய தாய் சுமித்ரா கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் தூங்க சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் விஷம் குடித்து வாந்தி எடுத்தபடி வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் ராமகிருஷ்ணனை மீட்டு காலிங்கராயன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

காதல் தோல்வி

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'ராமகிருஷ்ணனுக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இதனால் ராமகிருஷ்ணன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்,' என தெரியவந்தது. எனினும் காதல் தோல்வியால் தான் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story