சேத்தியாத்தோப்பு அருகே கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை
சேத்தியாத்தோப்பு அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தேப்பு அருகே ஆனைவாரி ஊராட்சி நல்லதண்ணிகுளம் கிராமத்தில், நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மார்கழி 1-ந்தேதி என்பதால், இரவு வரைக்கும் சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதன்பின்னர், இரவு 8 மணிக்கு மேல் நாட்டாமை ஜானகிராமன் கோவிலை பூட்டி சென்றார். இந்நிலையில் நேற்று காலை, கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
நகை திருட்டு
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த 4 அம்மன் சிலையில் இருந்த தலா 2 கிராம் தங்க தாலி செயின் என மொத்தம் ஒரு பவுன் நகை மற்றும் உண்டியலில் இருந்த பணத்தையும் மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.