கலெக்டர் அலுவலகம் அருகே வக்கீல் சரமாரி வெட்டிக்கொலை
கலெக்டர் அலுவலகம் அருகே வக்கீல் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வக்கீல்
தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன் மகன் முத்துக்குமார் (வயது 45). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக தொழில் செய்து வந்தார். மேலும் கலெக்டர் அலுவலகம் அருகே தங்கநகை அடகு கடையும் நடத்தி வந்தார்.
நேற்று மதியம் சுமார் 2.30 மணிக்கு முத்துக்குமார் தனது அடகு கடைக்கு காரில் வந்தார். காரை கடை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு மின்னல் வேகத்தில் 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட மர்மகும்பல் வந்தது. அவர்களை பார்த்ததும் முத்துக்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம கும்பல், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
போலீஸ் சூப்பிரண்டு விரைந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஊரக துணை சூப்பிரண்டு சுரேஷ், தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு சத்தியராஜ், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.
திடுக்கிடும் தகவல்
அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் அண்ணன் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். அவரது உடல் கடந்த 2006-ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது கொலையான வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி கோர்ட்டு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஜாமீனில் வராமல் தடுத்தார்
இந்த வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ராஜேஷ் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜாமீனில் வெளிவர முயற்சி செய்து வருகிறார். ஆனால் முத்துக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேசின் ஆதரவாளர்கள், முத்துக்குமாரை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் ெகாலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குடும்பம்
இந்த கொலை தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள். கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் வக்கீல் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-----------