கூடலூர் அருகே சாக்கடை கால்வாய் மேல்பகுதி சேதம்: சீரமைக்க கோரி மனு


கூடலூர் அருகே  சாக்கடை கால்வாய் மேல்பகுதி சேதம்:  சீரமைக்க கோரி மனு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே சேதமடைந்த சாக்கடை கால்வாயின் மேல்பகுதியை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தேனி

கூடலூர் எஸ்.டி.பி.ஐ. கட்டி நகர தலைவர் கான் அப்துல் கபார்கான் தலைமையில் துணை செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் சபீர் கான் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலகம், போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் அடிக்கடி கூடலூருக்கு வந்து செல்வார்கள். தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காகவும் வருகின்றனர்.

இதற்கிடையே கூடலூர்-குள்ளப்பகவுண்டன்பட்டி சாலையில் பள்ளி, கல்லூரி மற்றும் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஏராளமான ஜீப்களில் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஆதிதிராவிடர் காலனி அருகே சாக்கடை கால்வாயின் மேல் பகுதி சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story