தேவதானப்பட்டி அருகே துப்பாக்கியை காட்டி விவசாயிக்கு மிரட்டல்: 2 பேர் கைது
தேவதானப்பட்டி அருகே துப்பாக்கியை காட்டி விவசாயிக்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 40). விவசாயி. இவர், தான் வசித்து வரும் வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் வார்டு கவுன்சிலரான தனது மனைவியிடம் கூறாமல் எப்படி ஊராட்சி நிர்வாகத்திடம் கூறலாம் என்று கவுன்சிலரின் கணவரான கணேசன் (40) என்பவர் ஆத்திரமடைந்தார். இதனால் அவர், தனது நண்பரான எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசன் (35) என்பவருடன் சேர்ந்து பாண்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வல்லரசன் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிந்து வல்லரசன் உள்பட 2 பேரையும் கைது செய்தார். மேலும் போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி சோதனைக்காக தேனி கியூ பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். கியூ பிரிவு போலீசாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வல்லரசன் துப்பாக்கியை காட்டி பாண்டியை மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.