ஈரோடு அருகேஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


ஈரோடு அருகேஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தாா்.

ஈரோடு

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்திரி தாரா பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவருடைய மகன் அருண்குமார் (வயது 17). இவர் செண்டை மேளம் அடிக்கும் குழுவில் பணியாற்றி வந்தார். இதனால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று செண்டை மேளம் அடித்து வந்தார். இந்தநிலையில் சென்னையில் நடக்கும் ஒரு திருமண விழாவில் செண்டை மேளம் அடிப்பதற்காக தனது குழுவினருடன் சேர்ந்து அருண்குமார் நேற்று முன்தினம் புறப்பட்டார். அவர்கள் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தனர்.

அந்த ரெயில் தொட்டிபாளையத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ரெயிலின் படிக்கட்டு அருகில் உட்கார்ந்து பயணம் செய்த அருண்குமார் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு அருண்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story