கள்ளிப்பட்டி அருகே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது
கள்ளிப்பட்டி அருகே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.
டி.என்.பாளையம்
கள்ளிப்பட்டி அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிரிண்டர், லேப்டாப் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி தண்ணீர் பந்தல் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் மோட்டார்சைக்கிளை திருப்ப முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ேமாட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் 2 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 இருந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் 2 பேரையும் பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
விரைவில் பணம் சம்பாதிக்க...
விசாரணையில், 'பிடிபட்டவர்கள் கணக்கம்பாளையம் நேரு நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 35), கள்ளிப்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (40). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கடந்த வாரம் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் 2 பேரும் தங்களுடைய பண கஷ்டம் குறித்தும், விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.
கள்ளநோட்டுகள் புழக்கம்
அப்போது கோவிந்தராஜ் தான் கள்ள நோட்டு அச்சடிக்கும் பிரிண்டர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் சந்தோஷ், பிரகாசிடம் நீங்கள் ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்தால் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 தருவதாகவும், அதை புழக்கத்தில் விட்டால், மேலும் அதிக கள்ள நோட்டுகள் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.' அதன்படி இருவரும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு சென்றதாக கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவிந்தராஜை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அந்தியூர் எண்ணமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வீடு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவிந்தராஜ் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதும், அதில் போதிய வருமானம் இல்லாததால் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாகவும், இதுசம்பந்தமாக அவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து அச்சடித்து புழக்கத்தில் விட வைக்கப்பட்டிருந்த ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மதிப்புள்ள கள்ள நோட்டுகளையும், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டர், லேப்டாப் மற்றும் மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், சந்தோஷ், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.