அரசு பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்;மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
மொடக்குறிச்சி அருகே காங்கேயம்பாளையத்தை சேர்ந்த சமூக சேவகரான மாரிமுத்து உள்பட 3 பேர் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்தனர். பிறகு மாரிமுத்து கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:-
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வெளியில் வரும் மதுபிரியர்கள் சாலையோரம், பூங்காக்கள், வாகனங்களில் வைத்து மதுகுடிக்கிறார்கள். பிறகு காலி மது பாட்டில்களை முறையாக அகற்றாமல் சாலையில் வீசி செல்கிறார்கள்.
இதேபோல் வயல்வெளி, வாய்க்கால், நீர்நிலைகள் ஓரமான மது குடிப்பவர்கள் ஆங்காங்கே காலி மதுபாட்டில்களை உடைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் விவசாயிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.
அவர்களின் கால்களை பாட்டிலின் கண்ணாடி துகள் பதம் பார்த்து விடுகிறது. எனவே காலி மதுபாட்டில்களுக்கு உரிய விலை கொடுத்து டாஸ்மாக் கடைகளில் திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
ஆக்கிரமிப்பு
சத்தியமங்கலம் அருகே புதுகொத்துக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
எங்கள் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. 125 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். ஒருசிலர் வீடுகளும் கட்டி உள்ளார்கள். இந்த கோவிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபட்டு வருகிறார்கள். மேலும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை தடுக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
டாஸ்மாக் கடை
பா.ஜ.க. நிர்வாகி மெய்யானந்தன் தலைமையில் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதியில் மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்த பள்ளிக்கூடத்துக்கு 100 அடி தூரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு காலை 9 மணியில் இருந்தே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மது வாங்கி குடிப்பவர்கள் அடிக்கடி சாலையில் நின்று தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். தகாத வார்த்தையில் பேசி வருவதால் மாணவ-மாணவிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அரசு பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கல்குவாரியில் இருந்து எடுத்து வரப்பட்ட ஜல்லி கற்கள் சென்னிமலை அருகே ஈங்கூரில் முறைகேடாக பதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஐக்கிய கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் எஸ்.கண்ணன் மனு கொடுத்தார்.
265 மனுக்கள்
கூட்டத்தில் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 265 மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.