ஓசூர் அருகே, கடன் தொகை முறைகேடு புகார்: மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் சாலைமறியல்


ஓசூர் அருகே, கடன் தொகை முறைகேடு புகார்: மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் சாலைமறியல்
x

ஓசூர் அருகே கடன் தொகை முறைகேடு புகாா் தொடர்பாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

மகளிர் சுயஉதவிக்குழு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 39). இவர், பூமகள், செல்வ மகள் என்ற பெயரில் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களை நடத்தி வருகிறார்.

இவரிடம் ஜெய் நகர் பகுதியை சேர்ந்த 35 பெண்கள் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ரூ.9 லட்சம் கடன் பெற்று மாதந்தோறும் சங்க தலைவியான மஞ்சுளாவிடம் பணம் கட்டி வந்ததாகவும், அதை அவர் வங்கியில் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு, பணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மஞ்சுளாவிடம், சுயஉதவிக்குழு பெண்கள் கேட்டபோது, அவர் சரியான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலைமறியல்

இதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். இருப்பினும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென ஓசூர்-முத்தாலி சாலையில், புனுகன் தொட்டி என்ற இடத்தில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story