கடமலைக்குண்டு அருகேமலைப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகளை சீரமைக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
கடமலைக்குண்டு அருகே மலைப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கடமலை-மயிலை ஒன்றியம் அண்ணாநகர் முதல் கடமலைக்குண்டு வரை சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலான தேனி பிரதான சாலை கண்டமனூர் மலையடிவாரம் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பகுதியில் மரங்கள் அதிக அளவில் உள்ளன. தேனி சாலையில் போக்குவரத்து அதிக அளவில் உள்ளதால் வாகனங்களால் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் நிலவியது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார்புரம் முதல் டாணா தோட்டம் வரை தேனி சாலையோரம் உள்ள மலைப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை தீத்தடுப்பு கோடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மலைப்பகுதியில் மரங்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளது. எனவே காட்டுத்தீ ஏற்பட்டால் கடுமையான சேதங்கள் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தீத்ததடுப்பு கோடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.